Open Source Software Developer

பள்ளிக்கூடம்போயி, காலேஜ் போயி படிக்கிற படிப்பு எனக்கு வேண்டவே வேண்டாம். பரீட்சை என்றாலே எனக்குப் பயம்.

வருண், 19

”உங்க பையன் சதா கம்ப்யூடரையே சுத்திசுத்தி வர்றான். நாங்க சொல்ற வேலைஎதுவுமே செய்யறதில்லை..” ஆறாவது படிக்கும் பையன் வருண்மீது அவன் படித்த சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகம் குற்றம் சுமத்தியது. பெற்றோரிடம் புகார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்பையன் கேட்டான்: “எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். அதை ஏன் தடுக்கிறீர்கள்?” சீட்டு கிழித்து அனுப்பிவிட்டார்கள். இன்னொரு பள்ளிக்குப் போனான், அங்கும் எட்டாவதுக்கு மேல் படிக்காமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.

இப்போது 19 வயது ஆகும் வருணை ஒரு சீனியர் டெவலப்பராக டென்த் பிளானெட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் பார்க்கமுடிகிறது. ‘’எனக்கு படிப்பு, எக்ஸாம் எதுவுமே பிடிக்கலை. பிடிச்சதெல்லாம் கம்ப்யூட்டர் மட்டும்தான். அதனால் எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னுட்டேன். வீட்டிலேயே ஆன்லைன்ல பல விஷயங்களைக் கத்துட்டேன். அப்புறம்தான் இங்கே வந்து சேர்ந்தேன். இப்போ இங்கே 12,000 மாதம் சம்பளம் கிடைக்கிறது. அதைவிட வேலை பார்க்கிறது, புதிய டெக்னாலஜிகளைக் கத்துக்கிறது, அதைச் செய்துபார்க்கிறது. ப்ராஜெக்ட்களை முடிக்கிறதுன்னு மேலேமேலே போயிட்டிருக்கேன்” என்று  மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார் வருண்.

அப்பாவின் கிரெடிட் கார்டை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்தி சொந்தமாக செர்வர் ஹோஸ்ட்டிங் செய்து பணமும் சம்பாதித்திருக்கிறார் வருண். இதெல்லாம்இவர் வயதையொத்த மற்ற இளைஞர்கள் யோசித்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்பது முக்கியம்.

உங்கள் சமவயது நண்பர்கள்?

‘’எனக்கு நண்பர்களே ஒரு அஞ்சாறு பேருதான் இருப்பாங்க. ஆனால் எனக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கிற ரிச்சி ஸ்ட்ரீட்ல ஒரு ஐம்பது பேரை எனக்குத் தெரியும். ஆன்லைன்ல நான் ஒரு 500 தளங்களிலாவது உறுப்பினராக இருக்கேன். உலகளாவிய அளவில் எனக்கு ஆன்லைன் நண்பர்கள் இருக்காங்க. அதுபோதும்”

சரி பட்டப் படிப்பு?

“ பள்ளிக்கூடம்போயி, காலேஜ் போயி படிக்கிற படிப்பு எனக்கு வேண்டவே வேண்டாம். பரீட்சை என்றாலே எனக்குப் பயம்.”

லட்சியம்?

‘’நம்ம நாட்டில் மிகப்பெரிய தகுதியும்  திறமையும் வாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது. வெளிநாடுபோயிருக்கிற நம் திறமைவாய்ந்த மூளைகளை இங்கே கொண்டுவரணும். இங்கயே எல்லோருக்கும் வாய்ப்புகளை உருவாக்கணும்”

19 வயதுக்கு இது மிகப்பெரிய லட்சியமே.

-அந்திமழை ஏப்ரல் 2014- இதழில் வெளியான பேட்டி

Categories:

Comments